பொங்கலோ பொங்கல் ! vayal | ஜனவரி 13, 2011 at 5:22 மு.பகல் | Categories: Uncategorized | URL: http://wp.me/pewfk-2j1 |
விக்ரக வழிபாட்டுக்கு முன்னதாக, மனிதனுக்கு ஒளியே தெய்வமாக இருந்தது. இருளைக் கண்டு பயந்த மனிதன், சூரியன் உதயமானதும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான்; அந்த சூரியனையே தெய்வமாக எண்ணினான். சூரியனுக்காக தனி மதமும் தோன்றியது. இந்து மதம் முற்காலத்தில் ஆறு பிரிவுகளாக இருந்தது. விநாயகரை வணங்குவோர் கணாபத்யம், சிவனை வணங்குவோர் சைவம், விஷ்ணுவை வணங்குவோர் வைஷ்ணவம், சக்தியை வணங்குவோர் சாக்தம், முருகனை வணங்குவோர் கவுமாரம், சூரியனை வணங்குவோர் சவுரம் ஆகிய மதப் பிரிவுகளைக் கொண்டிருந்தனர். இவர்களை இணைத்தே இந்து மதத்தை உருவாக்கினார் ஆதிசங்கரர். சூரியனுக்கென்று தனி மதமே இருக்குமளவு அவர் புகழ் பெற்றவராக விளங்கினார். அவரே முழுமுதல் கடவுள் என்று சவுர மதத்தைப் பின்பற்றியவர்கள் நம்பினர். விநாயகரையும், சூரியனையும் ஒன்றுபடுத்தியும் சில கருத்துக்களைச் சொல்லலாம். சூரியனுக்கு ஒரிசா மாநிலம் கோனார்க்கில் கோவில் இருக்கிறது. கோணம் + அர்க்கம் என்று இதைப் பிரிப்பர். "அர்க்கன்' என்றால், "சூரியன்!' "கோணம்' என்றால், "பகுதி!' "சூரியனுக்குரிய இடம்' என்று இதற்கு பொருள் கொள்வர். "அர்க்கம்' என்ற சொல்லுக்கு, "எருக்கு' என்றும் பொருள் உண்டு. விநாயகருக்கு பிடித்தமான மலர் எருக்கு. அவருக்கு சதுர்த்தியன்று எருக்கம்பூ மாலை அணிவிக்கலாம். சூரியனுக்கு பிடித்தமான இலையும் எருக்கு தான். கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவில் தான், இன்று இந்தியாவிலேயே சூரியனுக்காக பழுதுபடாத நிலையிலுள்ள கோவில். இங்கே, எருக்கு தான் தல விருட்சம். எருக்கம் இலையில் தயிர்சாதம் வைத்து சாப்பிட்டு, நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட குஷ்டநோய் நீங்கியது என்று சூரியனார்கோவில் தல வரலாறு தெரிவிக்கிறது. சூரியனின் ஒளியில் இருந்து தான் தாவரங்கள் உணவைத் தயாரிக்கின்றன. சூரிய வெளிச்சமில்லாத இடத்தில், விதை போட்டால் முளைப்பதில்லை. சூரியனிடமிருந்து மனிதனால் உயிர் வாழ்வதற்குரிய சத்தை நேரடியாகப் பெற முடியாது என்கிறது அறிவியல். ஆனால், அவை தாவரங்கள் மூலமாக மனிதனுக்கு கிடைத்து விடுகின்றன. சூரிய வெளிச்சத்தின் உதவியோடு வளரும் தானியங்கள், காய், பழங்கள், மனிதனுக்கு உணவாகின்றன. இதற்குள் இருக்கும் சூரிய சக்தி தான் மனித உடலுக்குள் சென்று உயிர்வாழும் சக்தியையே தருகிறது. ஆனால், சூரிய சக்தியை காயத்ரி மந்திரம் மூலம் பெற முடியும் என, சாஸ்திரங்கள் கூறுகின்றன. காயத்ரி மந்திரம் சொல்பவர்களுக்கு தேகசக்தி, புத்திசக்தி, ஆன்மிகசக்தி ஆகியவை கிடைக்கின்றன. காயத்ரி மந்திரத்தை சொல்ல முடியாவிட்டாலும் கூட, அதை சுத்தமான உடல், மனதுடன் கேட்டாலே போதும். இந்த சக்திகள் நம்மை வந்தடைந்து விடும். சிறப்பு மிக்க சூரிய பகவானுக்குரிய தினமே பொங்கல். இந்நாளில், நமக்கு உணவளிக்கும் வள்ளலுக்கு, பொங்கலிட்டு நன்றி தெரிவிக்க வேண்டும். வீட்டுக்குள் பொங்கலிடும் புதிய நடைமுறையை மாற்றி, முன்பு போல, ஊரே ஒன்று கூடி, "பொங்கலோ பொங்கல்' என முழக்கமிட்டு, வீட்டு வாசலில் பொங்கலிடுவதன் மூலம் சூரிய பகவானுக்கு முறையாக மரியாதை செய்ய வேண்டும். ***
No comments:
Post a Comment